ஒவ்வொரு நாட்டிலும் பல்கலைகளுக்கும் பஞ்சமில்லை, கல்லூரிகளுக்கும் குறைவில்லை. ஆனாலும் மாணவர்களை மையமாக கொண்ட இணையதளங்களை பார்க்க முடியவில்லை.
மாணவர்களை மையமாக கொண்ட தளங்கள் என்றால் மாணவர்களுக்கு உதவக்கூடிய அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட தளங்கள். இந்த தளங்கள் பற்றி விவரிப்பதோடு ஸ்வேப்பர் இணையதளத்தை உதாரணமாக சொன்னலே போதுமானது.
கல்லூரி மாணவர்கள் தங்களின் தேவையை நிறைவேற்றி கொள்ள கைகொடுக்கும் வகையில் ஸ்வேப்பர் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த தேவை பாட புத்தகமாகவும் இருக்கலாம். பாடங்களில் வரும் சந்தேகமாகவும் இருக்கலாம், அவசர செலவிற்கான பணமாகவும் இருக்கலாம்.
இந்த தளம் மூலம் மாணவர்கள் தங்களிடம் உள்ள பொருட்களை வாடகைக்கு விடலாம். அது புத்தகமாக கூட இருக்கலாம். எப்படியும் தினந்தோறும் எல்லா புத்தகங்களையும் படித்து கொண்டிருக்க போவதில்லை.
புத்தகங்கள் ஒன்று மேஜையில் இறைந்து கிடக்கும் அல்லது அலமாரியில் தூங்கி கொண்டிருக்கும். அதே நேரத்தில் வேறு ஒரு வகுப்பில் இருக்கும் மாணவருக்கு அந்த புத்தகம் ஒரு வாரமோ பத்து நாட்களுக்கோ தேவைப்படலாம்.
பத்து நாட்களுக்காக புத்தகத்தை விலை கொடுத்து வாங்க வேண்டுமா என்று அந்த மாணவர் யோசிக்க கூடும். இது போன்ற நேரங்களில் அந்த மாணவர் தனது புத்தகத்தை வாடகைக்கு தர முன்வரலாம்.
இந்த மாணவர் அதனை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளவும் முன் வரலாம். இரண்டு மாணவர்களுக்குமே லாபம் தான். வாடகை தொகை முதல் மாணவருக்கு கைச்செலவுக்கு உதவும். இரண்டாம் மாணவரோ புது புத்தகத்தை வாங்கு தேவையில்லாமல் குறைந்த விலையில் வாடகைக்கு எடுத்து படித்து கொள்ளலாம்.
புத்தகம் என்றில்லை, பயனுள்ள எந்த பொருளையும் வாடகைக்கு விடலாம். வாடகைக்கு தான் விட வேண்டும் என்றில்லை, இருக்கும் பொருளை கொடுத்து இல்லாத பொருளை வாங்கி கொள்ளலாம். அதாவது பண்ட மாற்று.
கல்லூரி வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் தான். ஒரு மாணவரின் பொருளை இன்னொரு மாணவர் பயன்படுத்துவதோ அவர்கள் பரஸ்பரம் உதவிக்கொள்வதோ புதிதல்ல தான். ஆனால் பெரும்பாலும் இந்த பரிமாற்றம் மாணவர்களின் நெருக்கமான நட்பு வட்டத்துக்குள் நிகழ்வது.
ஆனால் நட்பு வட்டத்துக்குள் வெளியே உள்ள மாணவர்கள் தொடர்பு கொண்டு பயன்பெறுவது மிகவும் கடினம். தனக்கு தேவைப்படும் பொருள் யாரிடம் இருக்கிறது என்பதை ஒரு மாணவரால் கண்டு பிடிக்க முடியாமலே போகலாம்.
ஸ்வேப்பர் தளம் இந்த தொடர்பை ஏற்படுத்தும் அருமையான மேடையாக இருக்கிறது. மாணவர்கள் தங்களுக்கு தேவையான பொருள் யாரிடம் கிடைக்கும் என்பதை சுலபமாக தெரிந்து கொண்டு தொடர்பு கொள்ளலாம்.
புத்தகம் உள்ளிட்ட பொருட்களை பரிமாரிக்கொள்வது போல மாணவர்கள் தங்கள் திறமையையும் பரிமாறிக்கொள்ளலாம். உதாரணத்திற்கு ஒரு மாணவர் வயலின் வாசிப்பதில் கில்லாடியாக இருக்கலாம். அவர் மற்ற மாணவர்களுக்கு வயலின் வாசிக்க கற்றுத்தர முன் வரலாம். இதே போல கணித புலிகள் வகுப்பெடுக்க முன்வரலாம்.
பேராசிரியர்களை அணுக தயங்கும் மாணவர்கள் சக மாணவர்களிடமே நட்போடு சந்தேகத்தை தீர்த்து கொள்ளலாம். வேறு ஏதேனும் பொருட்கள் தேவை என்றாலும் இந்த தளத்தின் மூலம் தெரிவித்து உதவி கோரலாம். கேட்டது கிடைக்கும் என்பதோடு இந்த பரிமாற்ரங்கள் புதிய தொடர்பையும் நட்பையும் ஏற்படுத்தி தரலாம்.
No comments:
Post a Comment