மனதில் உள்ளதை எல்லாம் பகிர்ந்து கொள்ள இணையதளங்கள் இருக்கின்றன.கோபத்தை பகிர்ந்து கொள்ளவும்,கருத்துக்களை விவாதிக்கவும்,மகிழ்ச்சியை வெளியிடவும் இணையதளங்கள் இருக்கின்றன.
அந்த வகையில் இப்போது இணையவாசிகள் தங்கள் லட்சியங்களை பகிர்ந்து கொள்ள வழி செய்யும் நோக்கத்தோடு ‘மை பிக் ஆம்பிஷன்’ என்னும் தளம் உருவாக்கபட்டுள்ளது.இதில் உறுப்பினர்கள் தங்களது மனதில் உள்ள லட்சியங்களை வெளியிடலாம்.
லட்சியம் என்றவுடன் ஏதோ மாபெரும் நோக்கமாகவோ மகத்தான திட்டங்களாகவும் தான் இருக்க வேண்டும் என்றில்லை.மனதில் உள்ள தனிப்பட்ட இலக்கு எதுவாயினும் இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.
எழுத்தாளராக வேண்டும்,உலகை சுற்றி பார்க்க வேண்டும்,நானே சொந்தமாக வீட்டை வடிவமைக்க வேண்டும்,சிறந்த சாப்ட்வேர் இஞ்சினியராக வேண்டும் போன்று எல்லா வகையான இலக்குகளையும் பகிரலாம்.
இப்படி உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ளும் இலக்குகள் அவற்றுக்குறிய வகைகளின் கீழ் குறிச்சொற்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.விருப்பம் உள்ளவர்கள் மற்றவர்களின் இலட்சியங்களையும் பார்வையிடலாம்.
சரி இப்படி இலக்குகளை வெளியிடுவதால் என்ன பயன்?சாதித்து முடித்திராத நிலையில் இலக்குகளை பறைசாற்றி கொள்வது தற்பெருமையாகி விடாதா?என்றெல்லாம் கேட்கலாம்.
இலக்குகளை பகிர்ந்து கொள்வது என்பது ஒரு விதத்தில் அதனை அடைவதற்கான வழி என்று கூட வைத்து கொள்ளலாம்.மனதுக்குளேயே அசையை பூட்டி வைத்து கொள்வது போல இலக்குகளையும் தனக்குள்ளேயே வைத்திருந்தால் அதனை செய்து முடிப்பதற்கான உத்வேகம் வராமலேயே போய்விடலாம்.
ஆனால் வெளி உலகுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் மறந்தாலும் நண்பர்கள் அதனை நினைவு படுத்த வாய்ப்புள்ளது.
இந்த தளத்தில் இலக்கை வெளியிட்டதுமே உறுப்பினர்கள் அதற்கான கால கெடுவையும் நிர்ணயித்து கொள்ளலாம்.அவ்வப்போது இந்த தளத்திற்கு வருகை தந்து முன்னேற்றத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.இலக்குகளை அடைய இது கை கொடுக்கும்.அதே போல வெளி உலகுடன் பகிர்ந்து கொள்வது என தீர்மானித்தவுடனேயே அதனை பட்டை தீட்டி கொள்வதும் சாத்தியம்.
எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதில் துவங்கி புதிய மொழியை கற்க போகிறேன் என்பது வரை எல்லா வகையான இலட்சியங்களையும் பகிர்ந்து கொள்ள அழைக்கிறது இந்த தளம்.
இணையதள முகவரி; http://www.mybigambitions.com/
No comments:
Post a Comment